தமிழ்

நவீன சுவிட்சர்லாந்தில் – குடியுரிமை பெறுதல் ஒரு அடிப்படை உரிமை!

8 மில்லியன் மக்கள் வாழும் சுவிட்சர்லாந்தில் 2 மில்லியன் பேருக்கு சுவிஸ் நாட்டுக் கடவுச்சீட்டு இல்லை. தவிர்ப்புக் கொள்கை கொண்ட அரசியல் மட்டுமே இதற்கான காரணியாகும். ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்திலேயே இன்றுவரை குடியுரிமை பெறுதல் மிக கடினமானது. நாங்கள் பன்முகத்தன்மை கொண்ட நாளாந்த வாழ்க்கையை வாழ்கிறோம். ஆனால், அரசியல், வர்த்தகம், சமூகம் மற்றும் கலாச்சார அடிப்படையில், வாய்ப்புக்களும் உரிமைகளும் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை.  அது ஜனநாயகத்தில் ஒரு பாரபட்சத்தை ஏற்படுகிறது. ஆனால் எங்களிடம் சமூக கட்டமைப்பின் ஒரு புதிய மாதிரியை உருவாக்குவதற்கான இலட்சியம் உண்டு.

ஜனநாயக கடமைகளில் கலந்து கொள்ளுதல் ஒரு அடிப்படை உரிமை!

அனைத்து மனிதர்களும் பிறக்கும் போது சுதந்திரமானவர்களாகவும், இறையாண்மையிலும், உரிமைகளிலும் சமத்துவம் கொண்டவர்களாவும் உள்ளனர்.  சுவிற்சர்லாந்தில் வாழ்பவர்கள் அரசியல் மற்றும் சமுக வாழ்வில் பங்கு கொள்ளும் அனைத்து உரிமைகளும் உடையவர்கள். குடியுரிமை பெறுதலால் மட்டுமே இது சாத்தியம். தேர்தல்களிலும் வாக்கெடுப்புக்களிலும் பங்கேற்கும் உரிமை, வசிக்கும் உரிமை, பாதுகாப்பு  மற்றும் – எல்லாவற்றிற்கும் மேலாக – சமூகத்தின் பிரதிநிதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமை என்பவற்றையே குடியுரிமை குறிப்பிடுகிறது. ஒரு நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் எவரும் தன்னை அந்நாட்டின் பிரஜையாக கருதுவது ஒவ்வொரு தனி மனிதரினதும் அடிப்படை உரிமை.

நியாயமான ஜனநாயகத்துக்காக!

புலம்பெயர்வினால் ஏற்படும் பன்முகத்தன்மை சுவிற்சர்லாந்தின் கலாச்சார வளர்ச்சிக்கு உறுதுணையாகும். ஒரு மனிதனின் பூர்வீகம், அவரது வாழ்க்கை தத்துவங்கள், சமூக நிலைப்பாடு என்பன குடியுரிமையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.  குடியுரிமை தகுதி பெற இந்நாட்டுக்கு ஏற்றது போல் ஒருவர் தன்னை சுவீகரித்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. குடியுரிமை மூலமே அனைத்திலும் சம பங்களிப்பை உறுதி செய்து கொள்ளலாம். அப்போது தான், பொதுவான ஒரு சமூக நன்மைக்கு அனைவரும் முழுமையாக பங்களிக்க முடியும்.

குடியுரிமையை ஊக்குவித்தல்

ஒரு நியாயமான ஜனநாயகத்தின் நலன்களுக்காக மத்திய அரசாங்கம், மாநிலங்கள் மற்றும்  உள்ளூராட்சி அனைத்தும் குடியுரிமையை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். தற்போதைய குடியுரிமை வழங்கும் நடைமுறையானது உரிமையற்ற ஒன்றை ஒருவர் கேட்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த அணுகுமுறை மாறவேண்டும். இதுவரை சுவிஸ் நாட்டின் கடவுச்சீட்டு பெறாமல் இங்கு வாழ்பவர்களை குடியுரிமை பெறுவதற்காக சரியான முறையில் வழி நடத்த வேண்டும்.  ஊக்குவிப்பு நடவடிக்கைகளில், குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்களை நீக்க வேண்டும்.

பாரட்சமற்ற நிபந்தனைகள் மற்றும் நியாயமான நடைமுறைகள்

நான்கு வருடங்களுக்கு மேல் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒருவருக்கு எவ்வித வதிவிட நிலைமை இருந்தாலும் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இதுவரை காலாவதியான, பாரபட்சமான மற்றும் தன்னிச்சையான அனைத்து நிபந்தனைகளையும் அகற்ற வேண்டும். குடியுரிமை பெறுவதற்கு, ஒருவருக்கு இப்போது மாநில மற்றும் உள்ளூராட்சிகளில் விதிக்கப்படும் கால அளவு தற்போதைய சூழலில் பொருந்தாது.  அத்துடன் சமூக நல உதவி பெறவேண்டிய நிலைமையில் உள்ளவர்களுக்கு குடியுரிமை நிராகரிக்கப்படுவது பாரபட்சமானது.  குடியுரிமை பெறுதலுக்கான நடைமுறைகள் ஒரு அரச திணைக்களத்தில்  விரைவாகவும், குறைந்த கட்டணத்திலும் செய்யப்பட வேண்டும்.

சுவிட்சர்லாந்தில் பிறக்கும் எவருக்கும் சுவி̀ஸ் நாட்டுக் கடவுச்சீட்டு கிடைக்க வேண்டும்

சுவிட்சர்லாந்தில் வதிவிட உரிமையுடன் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சுவிஸ் நாட்டுக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இந்த வளர்ச்சியடைந்த அணுகுமுறை பல நாடுகளில் பொதுவானது. இங்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அது சம வாய்ப்பை உறுதி செய்கிறது. அது சமுதாயத்தின் பன்முகத்தன்மைக்கும் ஏற்றது. சமத்துவம் மற்றும் சமநீதி உள்ள உயிரோட்டமான ஜனநாயகத்தை எதிர்காலத்திலும் வைத்திருப்பதற்கு இது சுவிட்சர்லாந்துக்கு உதவும்.

அறிக்கையில் கையொப்பமிடுங்கள்!